
மேற்கு வங்கம் மாநிலத்தில் பாடம் சொல்லித் தருவதாகக் கூறி, பள்ளி மாணவர்களின் கைகளில் சிலம்பம் கம்புகளைத் தரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்கம் மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் மாநில சட்டமன்றத்தில் இன்றைய கூட்டத்தில் பேசிய அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜீ, ‘நம் மாநிலத்தில் குறிப்பாக வடக்கு வங்காள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் பெயரில், சிலம்பம் கம்புகளைத் தருவதாக நமக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபோன்ற பயிற்சிகள் நடத்தக்கூடாது என்று நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தும், ஆட்சேபமில்லா சான்றிதழை நம்மிடமிருந்து பெறாமலேயே இதுபோல் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்’ என தெரிவித்தார்.
மேலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிலர் தங்கள் பள்ளிகளில் இதுபோன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுவிட்டனர் என்றும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்லவும் அரசு தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் பள்ளிக்கூடங்களை நடத்தலாம். ஆனால், குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் பெயரில் குறுகிய மதவாத எண்ணம் கொண்டவர்களாக மாற்றும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இதுவரை 125 பள்ளிகளில் இவ்வாறு நடப்பது தெரியவந்துள்ளது. மேலும், 493 பள்ளிகள் கண்காணிப்பில் உள்ளன. இதுப்பற்றிய தகவல்கள் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது’ என பேசி முடித்தார்.