மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வது. இந்தநிலையில், இந்தக் கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் சார்பு இயக்கமான பாரதிய கிசான் சங்கம் தற்போது கையிலெடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய ஏற்கனவே இருக்கும் சட்டங்களைத் திருத்த வேண்டும் அல்லது புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்த பாரதிய கிசான் சங்கம், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், நாடு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தும் தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தப் பாரதிய கிசான் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பத்ரிநாராயண் சவுத்ரி, "விவசாயிகள் எதற்காகப் பயிர்களை வளர்கிறார்களோ, அதை அவர்களுக்கு மத்திய அரசு உறுதி செய்யவேண்டும். அரசாங்கம் லாபகரமான ஒரு விலையை அளிக்க வேண்டும் அல்லது எங்கள் கோரிக்கை ஏன் தவறு என்பதை எங்களுக்கு விளக்க வேண்டும். தற்போதைய குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஒரு மோசடி. குறைந்த பட்ச ஆதார விலைக்கு ஒரு சட்டம் வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "அனைத்து விவசாயிகளுக்கும் சமமான லாபகரமான விலைகளைக் கோரி. நாட்டின் அனைத்து மாவட்ட மையங்களிலும் பாரதிய கிசான் சங்கம் செப்டம்பர் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டங்களை நடத்தும். நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அரசு, இன்னும் பரிவுடன் சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.