குஜராத் மாநிலம் வடோதராவில் திறந்தவெளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் சாதிய பாகுபாட்டை அகற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும் எந்த கோவிலுக்கும் செல்ல உரிமை உண்டு. அனைத்து நீர் ஆதாரத்திலிருந்தும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
சாதிய ஒடுக்குமுறை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது. சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும், தீண்டாமைகளையும் நாம் சகித்துக் கொண்டிருக்க கூடாது. இத்தகைய பாகுபாட்டை வெறுமனே எதிர்க்காமல், அதை ஒழித்து காட்ட வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி பல பதக்கங்களை வென்ற போது அவர்களின் சாதி, அல்லது மதத்தைப் பற்றி யாரும் கேட்கவில்லை. அதே போல், சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளின் சாதி, மதம் பற்றி யாரும் கேட்கவில்லை. மேலும், கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கின் போது சாதி பாகுபாட்டை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் மக்கள் உதவினார்கள்.
சிலர், சனாதன தர்மத்தை ஒழிக்க போவதாக மேடையில் பேசுகிறார்கள். இந்துக்களை பற்றி பேசுவதால், ஆர்.எஸ்.எஸ் ஒரு மதவாத இயக்கம் என்று கூறி சித்தரிக்கின்றனர். சனாதனம் தர்மம் என்பது சடங்குகள் பற்றியது அல்ல. அது வழிபாட்டு முறைகள் பற்றியது. மேலும், அது மனிதர்களிடத்தில் இறைவனை காண்பது. நல்ல நடத்தை மற்றும் சமூகத்தின் நலன்களை அடைவதற்கான வழிமுறைகள் தான் சனாதன தர்மம்” என்று கூறினார்.