வங்கக் கடலில் உருவான 'ரிமால்' புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிமால் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் கரையை ஒட்டிய பகுதியில் ரிமால் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் ரிமால் புயல் எதிரொலியாக ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் காற்றின் போக்கின் காரணமாக உட்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் காற்றினுடைய போக்கு மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக வெப்பநிலை இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.