Skip to main content

என்ஐஏ சோதனையில் 44 பேர் கைது 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

44 people in NIA raid

 

ஆள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக 10 மாநிலங்களில் நடந்த சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியா - வங்கதேச எல்லை வழியாக ஆள்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஆட்களை கடத்தி வந்து வடமாநிலத்தவர் போல் வேலை பார்ப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா, அரியானா, ராஜஸ்தானில் என்ஐஏ சோதனை நடத்தியது. மேலும் சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி ஆகிய 4 இடங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் மின்னணு சாதனங்கள், செல்போன்கள், சிம் கார்டுகள், 20 லட்சம் ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் போது திரிபுராவைச் சேர்ந்த 21 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 10 பேர், அசாமில் 5 பேர், மேற்கு வங்கத்தில் 3 பேர், தமிழகத்தில் 2 பேர், புதுச்சேரி, தெலங்கானா, ஹரியானாவில் தலா ஒருவர் என மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்