ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அண்மைக்காலமாக தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன.
இந்தநிலையில் நேற்று (08.09.2021) செய்தியாளர்களைச் சந்தித்த மெஹபூபா முஃப்தி, தலிபான்கள் உண்மையான ஷரியா சட்டத்தைப் பின்பற்றினால் உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "தலிபான்களுடைய முதல் ஆட்சியின்போது, மனித உரிமைக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம் அவர்கள் மீது இருந்தது. தற்போது அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்ய விரும்பினால், அவர்கள் உண்மையான ஷரியா சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். ஷரியா சட்டத்தின் மீதான தங்கள் புரிதலின்படி ஆட்சி நடத்தக்கூடாது. பெண்களின் உரிமைகளை உள்ளடக்கிய உண்மையான ஷரியா சட்டத்தை அவர்கள் பின்பற்றினால், அவர்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தலிபான்கள் 1990களில் ஆட்சி செய்ததைப் போலவே தற்போது ஆட்சி செய்தால் அது மொத்த உலகிற்கும், குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கும் பிரச்சனையாக மாறும் எனவும் கூறியுள்ளார்.