வீட்டிலிருந்த பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள காஜியாபாத் பகுதியில் வசித்து வருபவர் அனுஜ் சவுத்ரி. இவர் டெல்லியில் உள்ள சஹாரா சமய் என்ற ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை ராசாப்பூர் பகுதிக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்த அனுஜ் சவுத்ரி வீடு திரும்பிய போது, மர்ம நபர்கள் இருவர் வீட்டிற்குள் நுழைந்து அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் அனுஜ் சவுத்ரியின் வயிறு மற்றும் வலது கையில் குண்டுகள் பாய்ந்தன. ஹெல்மெட் அணிந்துவந்திருந்த மர்ம நபர்கள், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
குண்டடி பட்ட அனுஜ் சவுத்ரி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனுஜ் சவுத்ரியின் மனைவி பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கவுன்சிலராக இருக்கிறார். இந்தத் தாக்குதலில் முன்விரோதம், அரசியல் உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.