இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் அது கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்திருந்தார். அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கடந்த 29 ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மணிப்பூரில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போலீஸ் கமாண்டோ, சிறுவன் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரான்சில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ‘மணிப்பூரின் தற்போதைய நிலை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றதாகவும், அப்போது மணிப்பூரில் நடைபெறும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதில், கலவரத்தில் சிறுபான்மையினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கடினமான சவால்களைக் கடந்து வரவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு விஷயத்தில் தலையிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று மத்திய அரசு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, “ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகியுள்ளோம். ஆனால் இது முற்றிலும் எங்களது உள்நாட்டு விவகாரம் என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெளிவாகக் கூறியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.