கரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை எப்போது நடத்துவது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று (29/05/2021) ஆலோசனை நடத்துகிறது. பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி மூலம் நடைபெற உள்ளது.
29 போட்டிகள் முடிந்த நிலையில் எஞ்சிய 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது தொடர்பாகவும், இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரைப் புறக்கணித்த நிலையில், வெளிநாட்டு வீரர்களை எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க வைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய பகுதிகளில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்திருப்பதாகவும், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்றே வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதால் 14வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் மே மாதம் 4ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.