ரிலையன்ஸ் குழும வருடாந்திர 42- வது மாநாடு இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி,அனைத்து இந்தியர்களும் டிஜிட்டல் முறையில் இணையவேண்டும் என்பதே ஜியோவின் கனவு என்றும், கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது என கூறினார். உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது. ஜியோவுக்கு 500 மில்லியன் சந்தாதாரர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா புதிய இந்தியாவாக வளர்ந்து வரும் சூழலில் ரிலையன்ஸும் புதிய ரிலையன்ஸாக உருவாகும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, 'ஜியோ ஃபைபர்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். செப்டம்பர் 5-ம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம் நடைமுறைக்கு வரும் என்றார். ஜியோ ஃபைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜி.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10000 ரூபாய் வரை சந்தாத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV & செட் டாப் பாக்ஸ் இலவசம். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் மூலம் இணையதள சேவை, டிவி கேபிள் சேவை, தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்ட மூன்று சேவைகளையும் ஒரே வயர் மூலமாக வீடுகளுக்கு கொண்டு சென்று ஜியோ ஃபைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.