
அரியானா குர்காவன் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காக 13 வயது சிறுமியை மாதம் 9 ஆயிரம் சம்பளத்திற்கு கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்த்துள்ளனர். முதல் இரண்டு மாதத்திற்கு மட்டும் அந்த பெண்ணின் தாயாருக்கு சம்பளப் பணத்தை வீட்டின் உரிமையாளர் சசி என்ற பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் சம்பளப்பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். அத்தோடு, சிறுமியை பார்க்க கூட அவரின் தாய்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், சிறுமியை வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்ததுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் சசி சிறுமியை தாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்தோடு, அவரது இரு மகன்களும் சிறுமியின் ஆடைகளை களைத்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியை கட்டி வைத்து, கைகளில் ஆசிட்டை ஊற்றி நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியின் தாய், தனது உறவினருடன் நேராக அந்த வீட்டிற்கு வந்துபார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சசி மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.