
39 லட்சம் மதிப்புள்ள தனது காருக்கு 34 லட்சம் செலவு செய்து '007' என்ற பதிவு எண்ணை வாங்கியுள்ளார் அகமதாபாத்தைச் சேர்ந்த இளைஞர்.
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஆஷிக் படேல்(28) அண்மையில் 39 லட்சம் ரூபாய்க்கு ஃபார்ச்சூனர் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வாகனத்துக்குத் தனது லக்கி நம்பரான '007' என்பதைப் பதிவு எண்ணாகப் பெற அவர் விரும்பியுள்ளார். அதற்காக, ஆர்.டி.ஓ நடத்தும் ஃபேன்ஸி எங்களுக்கான ஆன்லைன் ஏலத்தில் அவர் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஏலத்தின் தொடக்கத்தில் '007' என்ற எண்ணின் அடிப்படை விலையாக ரூ.25,000 நிர்ணயிக்கப்பட்டிருந்துள்ளது. இதனை, ஆஷிக் ஏலம் கேட்டபோது, இதே எண்ணிற்காக மற்றொருவரும் ஏலம் கேட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் மாறிமாறி ஏலம் கேட்டு, கடைசியாக இதற்கான தோகை ரூ.34 லட்சம் வரை வந்துள்ளது. இறுதியில் ரூ.34 லட்சத்திற்கு இந்த எண்ணை ஆஷிக் பெற்றுள்ளார்.
39 லட்சம் ரூபாய் காரின் நம்பருக்காக, 34 லட்சம் செலவு செய்தது குறித்து ஆஷிக் கூறுகையில், "எனது முதல் வாகனத்திற்கு 007 எண் கிடைத்தது, அது என் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொடுத்தது. என்னைப் பொறுத்தவரை இது பணத்தைப் பற்றியது அல்ல, இந்த எண், எனக்கு அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையைப் பற்றியது" எனத் தெரிவித்துள்ளார்.