மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.க. மூன்று இடங்களிலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா- காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜ.க. கூட்டணி தலா மூன்று இடங்களில் வென்றுள்ளனர்.
நான்கு மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடங்களுக்கு நேற்று (10/06/2022) தேர்தல் நடைபெற்றது. இதில், கர்நாடகாவில் தேர்தல் நடந்த நான்கு இடங்களில் மூன்று இடங்களில் ஆளும் பா.ஜ.க.வும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வென்றது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூன்று பேர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர். பா.ஜ.க.வின் கன்ஷ்யாம் திவாரியும் வெற்றி பெற்றார். ஆனால் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேச்சையாகக் களமிறங்கிய சுபாஷ் சந்திரா தோல்வி அடைந்தார்.
மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் விதிமீறல் புகார் காரணமாக வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெற்றது. இதில், ஹரியானாவில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷ்ணன்லால் பன்வரும், பா.ஜ.க. ஆதரவுப் பெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் மக்கான் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறி வாக்களித்ததும், ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டதும், அக்கட்சியின் வேட்பாளர் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா- காங்கிரஸ் கூட்டணியின் மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், அதன் நான்காவது வேட்பாளர் தோல்வி அடைந்தார். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அனில் பாண்டே, சஞ்சய் தனஞ்செய் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனா சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபுல் படேல், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இம்ரான் பிரதாப்கடி ஆகியோர் வெற்றி பெற்றனர்.