
குடிபோதையில் இருந்தவர்களை கைது செய்ய சென்ற காவல்துறையினரை, கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சிவான் பகுதியில் மது அருந்துதல், மது விற்பனை செய்தல் மற்றும் மது சேமித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் சில பேர் மது விற்பனை செய்து மது குடித்திருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் குடிபோதையில் இருந்தவர்களை கைது செய்ய போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்கு சென்ற போலீசார், குடிபோதையில் இருந்த ஒரு நபரைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது கிராம மக்கள் சிலர் ஒன்றுக்கூடி போலீஸ் வாகனத்தை மறித்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும் காவலர்களை, அங்கிருந்த ஆண்கள் சிலர் கன்னத்தில் அறைந்து, தடியால் அடித்து கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதனால், அந்த காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அந்த இடமே பரபரப்பானது. போலீசாரை கிராம மக்கள் சிலர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.