அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "அயோத்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தீர்ப்பு இந்தியாவின் சமூக துணிவை மேலும் பலப்படுத்தும். தீர்ப்பை சமநிலையுடனும், மகத்துவத்துடனும் எடுத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த தீர்ப்பிற்கு பின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.