ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் தொடர்ச்சியாக நீடித்து வந்த கருத்து மோதல்களால் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் இருந்து பாஜக தூண்டி விடுவதாக குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கும் நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை போயிருக்கிறது.
இந்த நிலையில் தனக்கு பெரும்பான்மை பல இருப்பதாகவும் சட்டமன்றத்தில் அதனை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் சொல்லி, சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அனுமதியை தாருங்கள் என ஆளுநர் கல்ராஜ்மிஸ்ராவுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் அசோக் கெலாட்! ஆனால், அது குறித்து ஆளுநர் காலதாமதம் செய்து வந்ததால், குதிரை பேரம் நடக்க ஆளுநர் வழிவகுப்பதாக கோபமடைந்த அசோக்கெலாட், ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, அசோக் கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலரும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.
இதனை ஜீரணிக்க முடியாத ஆளூநர் கல்ராஜ் மிஸ்ரா, “சட்டமன்றத்தை கூட்டுவது பற்றி வல்லுநர்களுடன் ஆலோசித்து கொண்டிருக்கிறேன். முடிவு எடுப்பதற்கு முன்பு, ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என தெரிவிக்கிறீர்கள். இப்படி எந்த முதல்வரும் அறிவித்தது கிடையாது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ.க்களே போராடுவது மோசமான முன்னுதாரணம் என்பது உங்களுக்கு தெரிகிறதா, மாநில ஆளுநராகிய என்னை நீங்களும் உங்களின் உள்துறையும்தான் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்க முடியாவிட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா, என்கிற கேள்வி வருகிறது. ஆளுநரின் பாதுகாப்புக்கு யாரை அணுக வேண்டும்’’ என கடுமையாக முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆளுநரின் இந்த கடிதம், ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.