ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், பாஜகவினரும் தொடர்ந்து இந்து ராஷ்டிரம், அகண்ட பாரதம் உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத், “இந்து ராஷ்டிரம் என்ற கொள்கையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் பின்வாங்கவில்லை. எந்தக் கொள்கையில் இருந்தும் பின்வாங்குவோம். ஆனால் இந்து ராஷ்டிரம் என்ற கொள்கையில் மட்டும் அப்படியில்லை” என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்தியாவில் ஒற்றை இந்து ராஷ்டிரம் குறித்து பேசுவதா என எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டம் ஒன்றில் பேசுகையில், "நாட்டில் மதத்தின் பெயரால் அரசியல் நடக்கிறது. மோகன் பகவத் மற்றும் மோடி ஆகியோர் இந்து ராஷ்டிரம் குறித்து பேசும்போது நான் ஏன் காலிஸ்தான் குறித்து பேசக்கூடாது என அம்ரீத் பால் சிங் பேசுகிறார். தீ மூட்டுவது எளிது; ஆனால் அதனை அணைக்க நேரம் எடுத்துக்கொள்ளும்" என்று பேசி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித் பால் சிங் என்பவர் காலிஸ்தான் குறித்துப் பேசி வருவது நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்ய பஞ்சாப் போலீஸார் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.