கடந்த 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைகழகத்தில் பி.எச்.டி பயின்றுவந்த ரோஹித் வெமுலா, சாதி அடக்குமுறையினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ரோஹித் வெமுலாவின் சகோதரர் ராஜா வெமுலா. இவர் விஞ்ஞானி ஆகவேண்டும் என விரும்பியவர். ஆனால், அண்ணனின் மரணத்திற்குப் பிறகு, ராஜா வெமுலா அவரது தாயார் ராதிகா வெமுலாவுடன் இணைந்து, சாதியப் பகுப்பாட்டை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். பல்கலைக்கழகங்களில் தலித் பாகுபாட்டை எதிர்த்து, ரோஹித் தொடங்கிய போராட்டத்தை, தாய்-மகன் இருவரும் தொடர்ந்தனர்.
ரோஹித் வெமுலாவின் மரணத்திற்குப் பிறகு, வருமானத்திற்காக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக மாறினார் ராஜா வெமுலா. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பணி வழங்க முன்வந்தபோது அதனை மறுத்த ராஜா வெமுலா, சட்டம் படிப்பதற்காக தனது விஞ்ஞானி ஆசையைக் கைவிட்டார்.
தற்போது ராஜா வெமுலா சட்டபடிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து ரோஹித் மற்றும் ராஜா வெமுலாவின் தயார் ராதிகா வெமுலா, தனது ட்விட்டர் பக்கத்தில், இனி தன் மகன் மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் நீதிமன்றத்தில் போராடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், என் இளைய மகன் ராஜா வெமுலா இப்போது ஒரு வழக்கறிஞர். 5 வருடங்களுக்குப் பிறகு, ரோஹித் வெமுலா மறைவுக்குப் பிறகு, எங்கள் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். வழக்கறிஞர் ராஜா வெமுலா இப்போது மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் நீதிமன்றத்தில் பணியாற்றுவார், போராடுவார், இது நான் சமுதாயத்திற்குத் திருப்பிச் செலுத்துவதாகும். அவரை ஆசீர்வதியுங்கள். ஜெய் பீம்” எனக் கூறியுள்ளார்.