நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தமிழ்நாட்டில் தனது தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. அதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பாஜக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பாஜக தென் தமிழக நாடாளுமன்ற தேர்தல் நிர்வாகிகளை சந்திக்க அமித்ஷா மதுரை வந்துள்ளார். அமித்ஷா தமிழகத்தில் தேர்தல் பணிகளை கவனிக்கும் அதே நேரத்தில் பாஜகவின்தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் திருப்பதி கோயிலில் தமிழக எம்.பி தம்பிதுரையுடன் இணைந்து சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, 'மத்திய அரசு மூலம் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு பல உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டே ஓபிஎஸ், இபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலம் கருதியே ஓபிஎஸ், இபிஎஸ் நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என கூறினார்.
இவர்கள் இருவரும் இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருப்பதியில் சாமி தரிசனம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் சிந்தா மோகன் கூறுகையில், 'ரேணிகுண்டா விமான நிலையம் வரும் ராகுல்காந்தி, இந்திரா மைதானம் அருகே உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய பின்னர், தாரகராமா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பிறகு அவர் திருமலையில் ஏழுமலையானை தரிசித்து விட்டு, இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்' என கூறினார்.