தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேற்று முன் தினம் இரவு திடீரென வந்தார். அங்குள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் இருந்த நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இன்று நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே தொலைதூரத்திலிருந்து சிகிச்சை தேடி வந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். சிகிச்சை பெறும் வழியில், அவர்கள் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குளிர்ந்த நிலம், பசி மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் சுடரை எரிய விடாமல் வைத்திருக்கிறார்கள். மத்திய அரசும், டெல்லி அரசும் பொதுமக்களுக்கான தங்கள் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய 3 கட்சிகள், டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற, அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார். இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் எந்தவித பதிலும் அளிக்காமல் தவிர்த்து வருகிறார். இதனால், கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.