காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விவசாயப் போராட்டங்கள் தொடர்பாகவும், 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொடர்பாகவும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
"சீனா இந்தியாவுக்குள் நுழைந்து நமது நிலத்தை அபகரிக்கிறது. நாம் நமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தியைத் தருகிறீர்கள்? நீங்கள் பாதுகாப்புச் செலவை ரூ.3000 கோடி முதல் 4000 கோடி வரை உயர்த்தியுள்ளீர்கள். நீங்கள் இதன்மூலம் என்ன செய்தியைத் தந்தீர்கள்?. ‘நீங்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியும், நாங்கள் எங்கள் பாதுகாப்புப் படைகளை ஆதரிக்கமாட்டோம்’ என்றா? என பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவு பெரிய அளவில் உயர்த்தப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, தற்போது இந்தியாவின் பாதுகாவலர்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள் என பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மோடியின் கார்ப்பரேட் மைய பட்ஜெட்டின் அர்த்தம், கடினமான சூழ்நிலைகளில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் நமது படைவீரர்கள், எந்த ஆதரவையும் பெறமாட்டார்கள். இந்தியாவின் பாதுகாவலர்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.