புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநில பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் இன்று (26/03/2021) நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2021- க்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் நமச்சிவாயம், ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு, 'புதுச்சேரியில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும். புதுச்சேரியில் மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். புதுச்சேரியில் பாரதியாருக்கு 150 அடி உயரத்தில் சிலை நிறுவப்படும். கரோனா காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லாக் கடன் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்' உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.