குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. பிரதமர் மோடி, ஜி - 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (13.06.2024) இத்தாலி செல்கிறார் இதற்கு முன்பாக இந்தக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப் படை விமானம் குவைத் விரைகிறது. முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குவைத் விரைந்துள்ளார்.