இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யுங்கள் என ராகுல் காந்தி மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால், சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்துள்ளது. மேலும், 2,86,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.மேலும்,மருந்தை அனுப்பாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.அமெரிக்கா மட்டுமின்றி மற்ற சில உலக நாடுகளும் இதே கோரிக்கையை வைத்தன.இதனையடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இருந்த தடையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "நட்பு என்பது பதிலடி பற்றியது அல்ல. அனைத்து நாடுகளுக்கும் தேவைப்படும் நேரத்தில் இந்தியா உதவ வேண்டும்.ஆனால் அதற்குமுன் உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்குப் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.