மணிப்பூர் மாநிலத்தின் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 28 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல் மார்ச் 5 தேதியும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று மணிப்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற வரையறைக்கும், இந்தியா குறித்த பாஜகவின் பார்வைக்குமான போர்தான் இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது வருமாறு;
நமது நாட்டின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்று விவரித்தேன். நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அப்படித்தான் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில், மாநிலங்களின் ஒன்றியம் என நம்மை வரையறுத்துக்கொண்டோம்.
எனது பேச்சுக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் எதிர்வினையாற்றியது. இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று நான் சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. நம் நாட்டிற்கு இரண்டுவிதமான வரையறைகள் உள்ளன. இது மாநிலங்களின் ஒன்றியம், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம உரிமை உள்ள மக்கள் ஒன்றியம் என்பது ஒரு வரையறை
எல்லா சித்தாந்தங்களையும்விட, மொழிகளையும் விட, எல்லாப் பண்பாடுகளையும் விட, ஒரே ஒரு சித்தாந்தம்தான் உயர்ந்தது, ஒரே ஒரு மொழிதான் உயர்ந்தது என்பதுதான் பாஜகவின் வரையறை. இன்று இந்தியாவில் இந்த இரண்டு வரையறைகளுக்கும் இடையேதான் போர் நடந்துகொண்டிருக்கிறது.