Skip to main content

"அரசிற்கு, வெளியே அமர்ந்திருப்பவர்கள் தீவிரவாதிகள்" - நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல் காந்தி!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

rahul gandhi

 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்ற நிலையில், மத்திய அரசோ சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் உறுதியாக இருந்துவருகிறது.

 

விவசாயிகளும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், விவசாயிகள் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்தநிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு ட்ராக்டரை ஓட்டிவந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயிகளின் செய்தியை நான் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அவர்கள் (அரசு) விவசாயிகளின் குரல்களை ஒடுக்குவதோடு, நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கவும் விடுவதில்லை. அவர்கள் இந்தக் கருப்புச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்தச் சட்டங்கள் 2 - 3 தொழிலதிபர்களுக்குச் சாதகமாக இருப்பது மொத்த நாட்டிற்கும் தெரியும்" என தெரிவித்தார்.

 

மேலும் "அரசாங்கத்தின் கூற்றுபடி, விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். வெளியே அமர்ந்திருப்பவர்கள் (போராடும் விவசாயிகள்) தீவிரவாதிகள். ஆனால் உண்மையில், விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன" என ராகுல் காந்தி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்