இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல்காந்தி பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அக்கடிதத்தில், “இந்திய ஒற்றுமைப் பயணம் டெல்லிக்குள் நுழைந்தபோது ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குளறுபடிகள் இருந்தது. ராகுல்காந்தி z+ பாதுகாப்பை பெற்றவர் என்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதில் போலீசார் தோல்வியடைந்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “ராகுல்காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல்காந்திதான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார். பல்வேறு சமயங்களில் ராகுல்காந்தியின் தரப்பிலிருந்து பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக வழிகாட்டுதல் நடைமுறைகள் மீறப்பட்டது. இது கவனிக்கப்பட்டு அவ்வப்போது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆண்டு முதல் ராகுல்காந்தி 113 முறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளார். எனினும் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. ராகுல்காந்தியின் பாதுகாப்பு விதிமுறைகளில் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர்” என சிஆர்பிஎஃப் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.