உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகள் உடனான மோதலின் போது எட்டுக் காவலர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தின் சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திக்ரு கிராமத்தில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள விகாஸ் துப்பே என்ற அந்த ரவுடியைப் பிடிக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவு டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், ஐந்து காவலர்கள் என ஒரு மிகப்பெரிய குழு அந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உ.பி அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அரசியல் தலைவர்கள்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி, “உத்தரப்பிரதேசம் தற்போது கொலைகார பூமியாக மாறிவிட்டது. நோயாளியின் தலைமையில் காட்டாட்சி (ஜங்கில்ராஜ்) நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் கான்பூர் குற்றவாளிகளுக்கு ஆதரவு அளித்ததால், எட்டு போலீஸாரின் உயிர் பறிபோயுள்ளது. வீரமரணம் அடைந்த எட்டு போலீஸாருக்கும் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். வீரமரணம் அடைந்த ஒவ்வொரு போலீஸாரின் குடும்பத்தாருக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பையும் வெளிக்கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, "ரவுடிகள் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த எட்டு போலீஸாரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது, குற்றவாளிகளுக்கு அரசின் மீது எந்தப் பயமும் இல்லை. சாமானியர்கள் முதல் போலீஸார் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான முதல்வர், இந்தச் சம்பவத்தில் கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் கருணை காட்டக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ட்விட்டரில் பதிவில், “கான்பூரில் எட்டு போலீஸார் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்துக்கு வெட்கக்கேடு, துரதிர்ஷ்டமானது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநில அரசு மெத்தனமாக இருந்துவிட்டது. இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களை அரசு விடக்கூடாது. இதற்கான சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கவேண்டும். இறந்த போலீஸாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.