17- வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 17- வது மக்களவை கூடியது. முதல் இரண்டு நாட்களில் புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, புதிய சபாநாயகராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ஓம் பிர்லா போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது உரையாற்றி வருகிறார். இதில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை கூட்டத் தொடரும் இன்று தொடங்குகிறது. ஜூலை 5-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 26- ஆம் தேதியுடன் இரு அவைகளின் கூட்டத் தொடர் முடிவடைகிறது.