இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (20-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸால் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே காகிதக் கசிவுக்குக் காரணம். இது மாறாத வரை, காகித கசிவுகள் தொடரும். இது தேச விரோத செயல். ரஷ்யா - உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால், நரேந்திர மோடியால் இந்தியாவில் காகித கசிவை நிறுத்த முடியவில்லை. அப்படியில்லை என்றால் இந்தியாவில் காகித கசிவை அவர் நிறுத்த விரும்பவில்லை. இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்.
மற்ற அரசு அமைப்புகளைப் போலக் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் பா.ஜ.க கைப்பற்றியதால் இது நடக்கிறது. நமது துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் எடுக்கப்படாமல், ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இது போன்ற பிரச்சனை வருகிறது. மேலும் இந்த அமைப்பும், பா.ஜ.கவும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்து விட்டன. பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்திற்கு நரேந்திர மோடி செய்ததை, தற்போது கல்வி முறையிலும் செய்துள்ளார்.
இது நடப்பதற்கும், நீங்கள் பாதிக்கப்படுவதற்கும் காரணம், ஒரு சுதந்திரமான கல்வி முறை தகர்க்கப்பட்டதால் தான். இங்குக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் முக்கியம். இப்போது, நாம் ஒரு பேரழிவில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும், முடமான ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது என்பதையும் மக்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இது ஒரு ஆழமான தேசிய நெருக்கடி. அரசிடம் இருந்து பதிலளிக்கும் திறனைக் கூட நான் காணவில்லை.” என்று கூறினார்.