மேற்கு வங்கத்தில் மாபெரும் வெற்றியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட திரிணாமூல் காங்கிரஸ், அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் திரிபுரா மாநிலத்தைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருகிறது. சில வாரங்களுக்கு முன்பு அம்மாநில ஆளுங்கட்சியான பாஜகவில் இருந்து ஒன்பது எம்.எல்.ஏக்களை திரிணாமூல் காங்கிரஸ் இழுக்க முயல்வதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து கட்சி தாவத் தயாரான எம்.எல்.ஏக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது திரிணாமூல் காங்கிரஸ், அடுத்த வருடம் திரிபுரா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை அதிகாரப்பூர்வமாகவே தொடங்கியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸுக்காக ஐ-பேக் பணியாளர்கள் திரிபுராவில் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் பிரகாஷ் சந்திர தாஸ், முன்னாள் எம்எல்ஏ சுபால் பவ்மிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் பன்னா தேப் உள்ளிட்ட ஏழு காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். இதில் சுபால் பவ்மிக் திரிபுரா மாநில பாஜக துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ள அவர்கள், 2023 தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் திரிபுராவில் ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.