ஹைதராபாத் போலீசார் கடந்த சில மாதங்களில் மட்டும் 69 பெற்றோர்களை கைது செய்து, ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் 14 முதல் 16 வயதுடைய இளைஞர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டியதால் அவர்களின் பெற்றோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவர்களுக்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை சிறைத்தண்டனை பெற்றுத்தந்துள்ளனர். இந்த கைது குறித்து போக்குவரத்து துணை ஆணையர் ஏ.கே.ரங்கநாதன் கூறுகையில், "ஓட்டுநர் உரிமம் பெறாமல் பிள்ளைகளை வண்டி ஓட்ட விடுவது குற்றமாகும், அதனால் பெற்றோர்கள் மீது மோட்டார் வாகனச்சட்டம் 180 கீழ் வழக்கு பதிவு செய்கிறோம். இளைஞர்கள் மீது ஓட்டுநர் உரிமம் பெறாத காரணத்தால் அடிப்படையில் மோட்டார் வாகன சட்டம் 180 கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர் என்று கூறினார்.
இது போல், பெற்றோர்கள் மீது ஹைதராபாத் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள காரணம், கடந்த பிப்ரவரி மாதம் இளம் வயதினரால்தான் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகும். அதற்கு முன்பு ஜனவரியில் ஐந்து இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். சிறுவர்களுக்கு வண்டி, கார் வாங்கித்தரும் பெற்றோர்களை தண்டித்தால் இதனை கட்டுப்படுத்த முடியும் என்பதற்காகதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.