
இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோ-டெக் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளிலிருந்து 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு ரூ150 என்ற விலையில் தரப்போவதாக தெரிவித்துள்ளது.
அதேநேரம் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி 600 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், தனியாருக்கு 1200 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தடுப்பூசி விலை அதிகமாக இருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தி தடுப்பூசி விலை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, தடுப்பூசி தயாரிக்க மக்கள் பணத்தில் பாரத் பயோ-டெக்கிற்கு உதவி செய்தது, அந்த நிறுவனத்திற்கு அரசு 65 கோடிக்கு மானியம் அளித்தது, மத்திய அரசின் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் அதற்கு உதவியது ஆகியவை குறித்த செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "மக்களின் பணம் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக தடுப்பூசி நிறுவங்களுக்கு தரப்பட்டன. ஆனால் தற்போது அதே மக்களை இந்திய அரசாங்கம், தடுப்பூசிக்காக உலகிலேயே அதிகமான விலையை கொடுக்க வைக்கிறது. மீண்டும் ஒருமுறை, தோல்வியடைந்த சிஸ்டம், மோடி நண்பர்களின் லாபத்திற்காக நமது குடிமக்களை தோல்வியடைய செய்கிறது" என கூறியுள்ளார்.