கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமான 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அவ்வப்போது காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்காது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எங்குமே இருக்காது. கர்நாடகா மாநிலத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ விரைவில் மேற்கொள்ளப்படும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கிறேன். முடிந்தால், பா.ஜ.கவில் இருக்கக்கூடிய ஒரு எம்.எல்.ஏவையாவது உங்கள் கட்சிக்கு இழுத்துக் காட்டுங்கள். காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு அந்த கட்சி மீது நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்று அந்த கட்சியில் இருக்கும் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை அணுகியுள்ளனர்” என்று கூறியிருந்தார். இது அப்போது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (18-10-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கவரவும் பா.ஜ.க.வில் ஒரு தனிக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வில் சார்பில் எங்கள் எம்.எல்.ஏக்களை அழைத்து என்ன டீல் பேசினார்கள் என்பதை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் என்னிடமும், முதல்வர் சித்தராமையாவிடமும் ஏற்கனவே கூறிவிட்டார்கள்.
அதனால், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் நடப்பது எங்களுக்கு தெரியும். அனைத்து தகவல்களும் எங்களிடம் உள்ளது. ஆனால், அதை பற்றி இப்போது நாங்கள் கூறமாட்டோம். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யார் யாரை, பா.ஜ.க அணுகினார்களோ, அந்த எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் பேசவைப்போம்” என்று கூறினார்.