இந்தியா முழுவதும் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க முயற்சிப்பவர்களுக்கு ரோல் மாடலாக மாறியிருக்கிறார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 87 வயது பாட்டி.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ளது படாலி கிராமம். இந்த கிராமத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம், இந்த கிராமத்தில் கழிவறைகள் அமைக்கவேண்டியதன் கட்டாயத்தை கிராம நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படும் மோசமான விளைவுகள், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவல்களை அறிந்த 87 வயது பாட்டி ராக்கி, இனி திறந்தவெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ராக்கி பாட்டி தன் வீட்டருகில் சொந்தமாக கழிவறை அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். தனது மகன் களிமண் சேகரித்துத் தர, ராக்கி பாட்டியே முழுக்க முழுக்க சொந்தமாக ஒரு கழிவறையை கட்டியெழுப்பி இருக்கிறார். ஊழியர்களுக்கு ஊதியம் தர தன்னிடம் பணம் இல்லாததால், தானே முழு வேலையையும் செய்துமுடித்ததாக கூறும் ராக்கி பாட்டி, இன்னும் ஒரு வாரத்தில் தான் கட்டிய கழிவறை தயாராகிவிடும் என பெருமிதம் கொள்கிறார்.
ராக்கி பாட்டியின் இந்த முயற்சி பலரிடம் பாராட்டைப் பெற்றிருக்கும் நிலையில், உதம்பூர் கிராம நிர்வாகம் அவருக்கு உரிய உதவிகள் செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.