அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மாநில அரசைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது என்பது தனி நபரின் அடிப்படை உரிமை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இடஒதுக்கீடு முறையை அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் எவ்வளவு கனவு கண்டாலும் அது நிறைவேறாது. பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் விரும்பியதில்லை.
இடஒதுக்கீட்டு நடைமுறை நமது ஜனநாயகத்தில் சமூக நீதியைப் பாதுகாத்து வருகிறது. எனவே தான் அதனை அழிக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்தது. அதிலும் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்று தொடர்ந்து வாதிட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்தது தான்.
நமது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான நடைமுறையான இடஒதுக்கீடு முறை மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் குரல்வளை நசுக்கப்படுகிறது. நமது நாட்டின் முக்கிய ஜனநாயக அமைப்புகளை மத்திய பாஜக அரசு ஒவ்வொன்றாக தொடர்ந்து அழித்து வருகிறது" என தெரிவித்தார்.