![AMARINDER SINGH](http://image.nakkheeran.in/cdn/farfuture/K0xGxGTZpoNbWXMjzBQLBuZKr8ST8KOgNZ2QsuBZZDk/1618475506/sites/default/files/inline-images/amriss.jpg)
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை, முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையைத் தடுக்க, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று (14.04.2021) பிரதமர் மோடி, கரோனா பரவல் தொடர்பாக நாடு முழுவதுமுள்ள ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. மஹாராஷ்ட்ராவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இரவுநேர ஊரடங்கும், வார இறுதியில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்திலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலம் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை அமல்படுத்தப்படும் இந்த ஊரடங்கு, ஏப்ரல் 30 வரை நீடிக்கவுள்ளது. மேலும், பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குக்குள் 50 சதவீத ரசிகர்களோடு செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் இம்மாத இறுதிவரை மூடப்படவுள்ளன.
இந்தநிலையில், ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில்லாமல் தேர்ச்சி பெறுவதாக பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.