
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் கீழ் வருகிறது, ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாம் சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதியைச் சேர்ந்தவர் மல்லாடி கிருஷ்ணராவ். இவர் 1996- ல் இருந்து ஏனாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். இதுவரை தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார். மேலும் புதுச்சேரி அமைச்சரவையில் மூன்று முறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2016- ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மல்லாடி கிருஷ்ணராவ், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரைவையில் சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்த நிலையில், கடந்த மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடரை அடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமியிடம் அளித்தார்.

இந்நிலையில் இன்று (15/02/2021) அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். அதேபோல், தனது உறுப்பினர் பதவி ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, அமைச்சராக இருந்த நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தனர். அதேபோல், பாகூர் எம்.எல்.ஏ தனவேலுவின் எம்.எல்.ஏ பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
மொத்தம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 -லிருந்து 11 ஆகக் குறைந்துள்ளது. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வில் 3 உறுப்பினர்களும், சுயேச்சையாக ஒரு உறுப்பினரும் உள்ளதால், பேரவையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 15 ஆக உள்ளது. அதேபோல், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 உறுப்பினர்களும், அ.தி.மு.க. கட்சியில் 4 உறுப்பினர்களும், நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக 3 பேர் என 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.