உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்பட்டது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வெழுதியுள்ளனர். முன்னதாக, இந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக நள்ளிரவு 2 மணிக்கு கான்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இரட்டை எஞ்சின் அரசு என்றால் வேலை வாய்ப்பு இல்லாதோருக்கு இருபுறமும் தாக்குதல் நடக்கிறது. 1.5 லட்சம் அரசு வேலைகள் காலியாக உத்தரப் பிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையற்றோராக உள்ளனர். பட்டப்படிப்பு, PhD முடித்தவர்கள் அடிப்படை கல்வி தகுதிக்கு கிடைக்கும் வேலைக்காக வரிசையில் நிற்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் பணிச் சேர்க்கை நடப்பதே கனவாக இருக்கிறது. அப்படியே நடந்தால் வினாத்தாள் கசிகிறது. தேர்வு நடந்தால் முடிவுகள் வெளியாவதில்லை. முடிவுகள் வெளியானால், பணி நியமனத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. வேலை பெறுவதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உள்ளது.இத்தகைய சூழலில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணுவம், ரயில்வே, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் பணிக்காக காத்திருக்கின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உடைந்து போகின்றனர்.
வேலைவாய்ப்பின்மையால் மனமுடைந்து வீதிகளுக்கு வந்து போராடும் இளைஞர்களுக்கு போலீசாரின் லத்தியே பரிசாக கிடைக்கிறது. இளைஞர்களுக்கு வேலை என்பது வருமானம் ஈட்டுவதற்காக மட்டும் கிடையாது, குடும்பத்தின் நிலையை மாற்றும் கனவாக இருக்கிறது. அந்த கனவு உடையும்போது ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் நொறுங்கிப் போகிறது. காங்கிரஸின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும். அவர்களின் உழைப்பை வீண் போக விடமாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.