புதுச்சேரி சட்டசபையில் 2019-20 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் சட்டசபை கூடியபோது பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கான செலவினங்களுக்கு மட்டுமே சட்டசபையின் ஒப்புதல் பெறப்பட்டது.
அதையடுத்து முழுமையான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். பல்வேறு அமைப்பினரை அழைத்து அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பட்ஜெட் தொகையை இறுதி செய்வதற்காக மாநில திட்டக்குழு, கடந்த 13-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் கூடியது. அந்த கூட்டத்தில் 8,425 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் கடந்த 18-ஆம் தேதி பட்ஜெட் தொகை விபரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வராததால் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவது தாமதமானது. இருப்பினும் புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் இறுதி வடிவம் கொடுத்தது. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது புதுச்சேரி அரசு.
அதன் தொடர்ச்சியாக 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 26- ஆம் தேதி ஆளுநர் உரையும், 27- ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தலும், விவாதங்களும் நடைபெற உள்ளது. அதன் பிறகு 29-ஆம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும். அதேசமயம் இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் சிவக்கொழுந்து மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.