புதுச்சேரி கரிக்கலாம்பக்கம் பகுதியில் ரவுடிகள் ஜோசப் மற்றும் அவரது தம்பி இணைந்து போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு உள்ளான போலீசார் சிவகுரு மற்றும் மைக்கேல் ஆகிய இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசாரை தாக்கிய ரவுடிகளை கைது செய்ய கோரி கடலூர்- புதுவை சாலையில் பொது மக்கள் இன்று தவளக்குப்பத்தில் சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல் துறையினர் சமரசம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே காவலர்களை தாக்கிய குற்றவாளிகளை வில்லியனூர் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் தேடி வந்தனர். குற்றவாளிகளில் ஜோசப் கண்டமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் மற்றும் வில்லியனூர் குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து அங்கு சென்றனர். அப்போது கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்துகுப்பம் கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதை கண்டனர்.
அவன் போலீசார் வருவதை கண்ட உடன் தப்பித்து ஓடினான். அவனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து வலது கை, இடது கால் முறிந்தது. உடனே போலீசார் அவனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.