மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் நேற்று முன் தினம் (29.10.2023) ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது காலை 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகச் சமூக வலைத்தளத்தில், இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறி, கேரள காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் இவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கொச்சி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மத்திய அமைச்சரின் பதிவு உட்பட 200க்கும் மேற்பட்ட வலைத்தள பதிவுகள் வெறுப்பூட்டும் வகையில் இருந்ததாகவும், இது குறித்து 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். அதே சமயம் குண்டு வெடிப்பு தொடர்பாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேரள அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.