கடந்த ஜூலை 28ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டார். அதன்படி, குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான கைலாசநாதன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்கள்.
மேலும், ராஜஸ்தான் மாநில ஆளுநராக மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரான ஹரிபாவ் கிசன்ராவ் பக்டே, தெலங்கானா மாநில ஆளுநராக திரிபுரா மாநில முன்னாள் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். அதே போல் சிக்கிம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேகாலயா, பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டார். தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் ஆர்.என்.ரவியின் பதவி காலம் ஜூலை மாத இறுதியுடன் முடிவடைந்த நிலையில், இன்னும் தமிழ்நாட்டுக்கான புதிய ஆளுநர் குறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான கைலாசநாதன் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரி ராஜ்நிவாஸில் பதவி ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார்.