Skip to main content

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்'! - துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

PUDUCHERRY GOVERNOR TAMILISAI SOUNDARARAJAN ORDER

 

புதுச்சேரியில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை அனைவரும் 'ஆல் பாஸ்' என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பள்ளிகள் மீண்டும் திறக்கவும், தேர்வில் தேர்ச்சி பெரும் முறையை அறிவிக்கவும் பள்ளிக் கல்வி இயக்ககம் சமர்ப்பித்த கோப்புக்கு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (11/03/2021) ஒப்புதல் அளித்துள்ளார். 

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து வட்டாரங்களிலும் 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் "ஆல் பாஸ்" என்று அறிவிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 மற்றும் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தமிழ்நாடு வாரியத்தின் வழிகாட்டுதல்படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 10 மற்றும் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் வழிகாட்டுதலின் படி தேர்ச்சி முறை அறிவிக்கப்படுவார்கள். 

 

பள்ளிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டில், 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை மார்ச் 31- ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும். கோடை விடுமுறை ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் துவங்கும். இருப்பினும் 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகள் அந்தந்த மாநில வாரியங்களின் தேர்வு அட்டவணைப்படி நடத்தப்படும். 

 

துணை நிலை ஆளுநர் பின்வரும் இரண்டு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். முதியோர் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத்தை 1,54,847 பயனாளிகளுக்கு வழங்க ரூபாய்  29.65 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டது. மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் வாங்குவதற்கு ரூபாய் 24.35 லட்சம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

 

தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 4- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை அனைத்து கள் மற்றும் சாராயக் கடைகள், மதுபானக் கடைகள், கிளப்புகள் மற்றும் பார்கள், மது வழங்கும் உணவகங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் ஆணை பிறப்பித்துள்ளார். அதேபோல், வாக்குகள் எண்ணும் தினங்களில் மே 2- ஆம் தேதி முதல் மே 3- ஆம் தேதி மாலை 04.00 மணி வரை இக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்" இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 

 

சார்ந்த செய்திகள்