புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: - "சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள். விமர்சனமும், பாராட்டுதலும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கான உரிமை. மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு அந்த சாசனத்தை ஏற்றுக்கொண்டவர்களின் அறிவிப்பையும், விமர்சனத்தையும் வெளியிடுவது பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் கடமை.
அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் பேட்டியை வெளியிட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிக்கை வெளியிட்டுருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனக்கான விமர்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர அதை வெளியிடும் பத்திரிகைகள் மீது குற்றஞ்சுமத்தக்கூடாது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
நாட்டின் பிரதமர் உள்ளிட்டவர்கள் மீது கூட அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அதை பிரதமரிடம் கேட்டு விட்டுத்தான் செய்தி போட வேண்டும் என பிரதமர் கூட கூறவில்லை. ஏனெனில் இது ஜனநாயக நாடு, மன்னர் ஆட்சி நடக்கவில்லை. ஆகவே தனக்கு எதிராக வரும் விமர்சனத்திற்கு உரிய விளக்கமளிக்க வேண்டும், இல்லையெனில் புகார் கூறியவருக்குப் பதில் அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு பத்திரிகைகளை மிரட்டும் செயலை மேதகு துணை நிலை ஆளுநர் கைவிட வேண்டும்.அதுவே ஆரோக்கியமானது.
மேலும் ஒரு மாநிலத்தின் முதல்வரும், அமைச்சர்களும் குற்றச்சாட்டுகள் கூறும்போது அதை பத்திரிகை வாயிலாகத் தெளிவுபடுத்த வேண்டுமே தவிர ஊடகங்களை மிரட்டும் தொனியில் அறிக்கைவிடுவது துணை நிலை ஆளுநரின் எதேச்சதிகாரத் தன்மையைக் காட்டுகிறது. இதனைப் புதுச்சேரி செய்தியாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.