அரசு பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று (22/02/2021) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கிய நிலையில், முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதனை சட்டப்பேரவையின் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய நாராயணசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து, ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, நாராயணசாமியுடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாராயணசாமி, "புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்வதாக, துணை நிலை ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான். நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்" என்றார்.
புதுச்சேரியில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.