மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இதில் வளர்ச்சி திட்டங்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு சில அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய மோடி, அமைச்சகங்களில் ஆலோசனைகள் வழங்கும் பணியிடங்களில் அமைச்சர்கள் தங்கள் உறவினர்களையும், நெருக்கமானவர்களையும் பணியில் அமர்த்தக் கூடாது என்று எச்சரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல ஊடகங்களிலும், பொதுவெளியிலும் அமைச்சர்கள் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். உண்மைகளையும், நேர்மையான புள்ளிவிவரங்களை மட்டுமே எப்போதும் பேச வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர்கள், இணையமைச்சர்கள், அதிகாரிகள் இடையே சிறந்த கூட்டுறவு இருத்தல் வேண்டும். இந்த கூட்டுறவு மூலம் நிர்வாகத்தை வேகமாகவும், திறமையாகவும் கொண்டு செல்ல முடியும் என்றும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.