மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (27/02/2022) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதில், வேலூரில் இருந்து கடத்தப்பட்ட 600 ஆண்டு பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது. அதேபோல், வாரணாசி, பீகாரில் இருந்து கடத்தப்பட்ட பழமையான சிலைகளும் மீட்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஹாலந்து, ஜெர்மனி, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஏழு ஆண்டுகளில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் 200- க்கும் மேற்பட்ட சிலைகள் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. அனைவரும் தாய் மொழியில் பேசுவது, தங்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது சிறப்பானதாகும். பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சையின் மகிமை குறித்து எப்போதும் பேசுவார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வருகின்றனர்.
பாதுகாப்புப் படைகளில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில்துறை, கல்வி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு இன்றியமையாதது. முத்தலாக் சட்டம் இயற்றப்பட்டப் பிறகு பெண்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.