நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 14 வரை குறையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் வெகு விரைவாக இந்தியாவில் எதிரொலிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது குறைந்து காணப்படுவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவிலும் குறையலாம் எனத் தகவல்கள் வருகின்றன.
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 81 டாலராக இருந்த நிலையில் தற்போது 74 டாலராக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இந்திய மதிப்பிலும் குறிப்பிடத்தக்க விலைக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 112.8 டாலராக இருந்த பேரல் தற்போது 31 டாலர் விலை குறைந்து 82 டாலராக உள்ளது.
எஸ்எம்சி குளோபலின் கூற்றுப்படி, “நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யில் ஏற்படும் 1 டாலர் விலைக் குறைப்பின் மூலம் சுத்திகரிப்பு செலவில் 45 பைசாவை சேமிக்கின்றன. அதன்படி பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை குறையலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை ஒரே நாளில் நிகழாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த முறை கலால் வரி குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.