இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் 15- வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டுள்ளனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்நிலையில் பிற்பகல் நிலவரப்படி பாஜக அணியின் திரௌபதி முர்மு பெற்ற வாக்குகள் மதிப்பு 3,78,00 என உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா வாக்கு மதிப்பு 1,45,600 என உள்ளது. திரௌபதி முர்முவுக்கு 540 எம்பிக்களும், யஷ்வந்த் சின்ஹா 208 எம்பிக்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கையில் 15 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளார்.